
சென்னை, பிப். 28- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது. அபிஷேக் சர்மா 55, ஹர்திக் பாண்டியா 50, திலக் வர்மா 44, இஷான் கிஷன் 38, சூர்யகுமார் யாதவ் 33, சஞ்சு சாம்சன் 24 ரன்கள் விளாசினர். போட்டி முடிவடைந்ததும் திலக் வர்மா கூறியதாவது: ஓர் அணியாக நாங்கள் ரன்கள் குவிப்பதை விரும்புகிறோம். பவர்பிளேவில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழந்தாலும், அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை மாற்றக்கூடாது என ஆலோசித்துள்ளோம். அதனால், விக்கெட்டுகள் சரிந்தாலும் அதிரடியாகவே விளையாடுவோம். தொடக்க வீரர்கள் நல்ல துவக்கம் கொடுத்தால், அந்த நம்பிக்கை மூன்றாம், நான்காம், ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன்களுக்கும் தொடரும். அந்த வகையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி இருந்தார். இதுகுறித்து நாங்கள் ஓர் அணியாக விவாதித்தோம். எதிரணியின் பந்துவீச்சாளர்கள் பயப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களது பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் அடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சிறந்த மனநிலையுடன் போட்டியில் விளையாட வேண்டும் என ஆலோசனை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக டி 20 கிரிக்கெட்டில் நாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பதைப் வீடியோவில் பார்த்தோம். அதன் பிறகுதான் எங்கள் அனைவருக்கும் நம்பிக்கை வந்தது. நாங்கள் ஒரு குழுவாக அதைப் பற்றி விவாதித்தோம். போட்டியின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக நாம் எவ்வாறு விளையாடினோம் என்பதை நினைத்துப் பாருங்கள் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எங்களிடம் கூறினார். ஆட்டத்தின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் தனிப்பட்ட வீரராக களத்துக்குள் புன்னகைத்தபடி அனுபவித்து விளையாட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அகமதாபாத், டெல்லி ஆடுகளங்களும் நன்றாகவே இருந்தன. ஆனால் இது ஒரு வேடிக்கையான விளையாட்டு. எனவே மனநிலை மிகவும் முக்கியமானது. ஒரு விக்கெட் விழுந்தால், பெரிய ஷாட்களை விளையாடுவதற்கு சிறிது நேரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற மனநிலை எங்களுக்குள் இருந்தது. கடந்த தொடரிலும் அதற்கு முன்பும் நாங்கள் அதே அணியாகவே விளையாடி வருகிறோம். அந்த நேரத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், முன்பு எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், அதை எதிரணியின் பந்து வீச்சாளரிடம் கடத்தினோம். விக்கெட் விழுந்தால், அடுத்த பந்தில் 6 ரன்கள் எடுப்போம்.முதல் பந்து விளாசுவதற்கான வகையில் இருந்தால் விளாச வேண்டும் என்று நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு திலக் வர்மா கூறினார்.


















