ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு

டெஹ்ரான்: மார்ச் 1-
ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர வான்வழி தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் குண்டு விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (88) தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில், போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் காமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, குவாம், கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. டெஹ்ரானில் உள்ள காமேனியின் வீடு, அலுவலகம், ராணுவ அலுவலகம், உளவுத் துறை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் ராணுவத்​தின் சக்​தி​வாய்ந்த படைப்​பிரி​வாக இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) செயல்​படு​கிறது. இந்நிலையில், ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் உள்ள ஐஆர்ஜிசி படை முகாமை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அப்போது அருகே உள்ள மகளிர் தொடக்கப் பள்ளியில் சில குண்டுகள் விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலில் ஐஆர்​ஜிசி மூத்த தளப​தி​கள், நூற்​றுக்​கணக்​கான வீரர்​கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ‘மதத் தலைவர் காமேனி தற்போது டெஹ்ரானில் இல்லை. அவர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிபர் பெசெஷ்கியனும் பாதுகாப்பாக இருக்கிறார். ஈரான் முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. டெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்பு அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் பதில் தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்கள் மற்றும் வடக்கு, மத்திய, தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது.ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்டஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தல்:மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், ‘போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இஸ்ரேல், ஈரான், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுங்கள். உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்’ என்று எச்சரிக்கை விடுத்து, அங்குள்ள இந்திய தூதரகங்கள் நேற்று தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளன.