
காரைக்கால், மார்ச் 6- காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (மார்ச் 6) நடைபெற்ற சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழா சிறப்பான வகையில் நடைபெற்றது. இக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் அருள் பாலிக்கிறார். சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்த கடந்த சனிப்பெயர்ச்சி விழா 2023- ம் ஆண்டு டிச.20- ம் தேதி நடைபெற்றது. இம்முறை சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இவ்விழாவையொட்டி சனீஸ்வரபகவானுக்கு இன்று காலை நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் வஜ்ர அங்கி அணிவிக்கப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு திரையிடப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டு, சனிப்பெயர்ச்சி நிகழ்வை குறிக்கும் வகையில், சரியாக காலை 8.24 மணிக்கு திரை விலக்கப்பட்டு, சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் மூழ்கி நீராடி குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து சனிபகவானை வழிபட்டு செல்வது ஐதீகம். அதன்படி தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் அதிகாலை முதலே நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். தொடர்ந்து கலி தீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்து விட்டு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர்.



















