Home மாவட்டங்கள் பெங்களூர் முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்

முதல்வர் பதவி – டி.கே.சிவகுமார் பிடிவாதம்

பெங்களூரு, மார்ச் 9-
அதிகாரப் பகிர்வு விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்த தமக்கும் முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார். நீண்ட நாட்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் இவர் டெல்லியிலேயே முகாமிட்டு தனது கோரிக்கையை நிறைவேற்ற மேலிட அளவில் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார்.
மைசூரில் கடந்த சனிக்கிழமை முதல்வர் சித்தராமையா, “மேலிடம் ஒப்புக்கொண்டால் அடுத்த இரண்டு பட்ஜெட்டுகளையும் நானே தாக்கல் செய்வேன்” என்று கூறியதைத் தொடர்ந்து, டி.கே.சிவகுமார் நேற்று கலபுரகியில் ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். பிறகு கார்கேவுடன் டெல்லிக்குச் சென்றார்.
டெல்லியில் நேற்று இரவு கட்சித் தலைவர்களைச் சந்திக்க டி.கே.சிவகுமார் முயன்ற போதிலும், சந்திப்பு சாத்தியப்படாததால் இன்றும் அவர் டெல்லியிலேயே தங்கியுள்ளார். இன்று கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
மாநிலத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான மோதல் தொடங்கி 4-5 மாதங்கள் கடந்தும், மேலிடம் இது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை மாற்றம் தொடர்பாக மாநில காங்கிரஸில் எம்எல்ஏக்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருவதால், கோஷ்டி அரசியல் தலைதூக்கியுள்ளது.
தலைமை மாற்றம் தொடர்பாக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் இரவு விருந்து சந்திப்புகள் தீவிரமடைந்துள்ளன. இவ்வளவு நடந்தும் மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது.
தலைமை மாற்றம் தொடர்பாக யாரும் பகிரங்கமாகப் பேசக்கூடாது என்று மேலிடம் ஏற்கனவே மாநில எம்எல்ஏக்களுக்குக் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தாலும், தலைமை மாற்றம் குறித்த எம்எல்ஏக்களின் ஆதரவு-எதிர்ப்பு அறிக்கைகள் தொடர்கின்றன.
தலைமை மாற்றம் தொடர்பாக மேலிடம் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரின் ஆதரவு எம்எல்ஏக்கள் மேலிடத்தை வலியுறுத்தியிருந்தனர். மேலும், சில எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டு மேலிடத்திற்கு நிலவரத்தைத் தெரிவிக்க முயற்சித்தனர். இவ்வளவு இருந்தும் மேலிடம் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுக்கத் தயங்கி வருகிறது.
துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் ஆக வாய்ப்பளிக்கவும், அவர் கட்சிக்காக உழைத்துள்ளார் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், முதல்வர் சித்தராமையா தாம் மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்றும், மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத் தான் பின்பற்றுவேன் என்றும் கூறுவதன் மூலம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவை அனைத்திற்கும் மத்தியில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பலமுறை டெல்லி பயணம் மேற்கொண்டார். இப்போது மீண்டும் அவர் டெல்லியில் முகாமிட்டு, அதிகாரப் பகிர்வு விவகாரத்தைத் தீர்க்குமாறு மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இன்று மேலிடத் தலைவர்களைச் சந்திக்கும் அவர், நாளை பெங்களூரு திரும்ப உள்ளார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் கோரிக்கைக்கு மேலிடம் எந்த மாதிரியான பதிலளிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.