Home செய்திகள் தேசிய செய்திகள் நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி: மார்ச் 11-
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன.அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கி உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து, எல்பிஜி காஸ் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
இந்தியாவில் சுமார் 90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, விலையும் உயர்த்தப்படவில்லை. ஆனால், சமையல் காஸ் (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எல்பிஜி.யைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இந்தியாவின் எல்பிஜி இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில், வணிகநிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன.மும்பையில் சுமார் 3,869 பெரிய ஓட்டல்களும் ஆயிரக்கணக்கான சிறிய ஓட்டல்களும் செயல்படுகின்றன. வணிக எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை: சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலியத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மாற்று வழிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.