Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது

பெங்களூருவில் கோர விபத்து: லாரி மோதி கார் டிரைவர் பலி; குடோன் தீப்பற்றி எரிந்தது

பெங்களூரு: மார்ச் 27-
பெங்களூரு குருபரஹள்ளி அருகே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிய விபத்தில், காரில் உறங்கிக்கொண்டிருந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோதிய வேகத்தில் அருகில் இருந்த பழைய இரும்பு குடோனில் தீப்பற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தின் விவரம்:
ஆந்திர மாநிலத்திலிருந்து சுங்கதகட்டே பகுதிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில், கூகுள் மேப் காட்டிய வழியைப் பின்பற்றி ஓட்டுநர் சர்மா லாரியை ஓட்டி வந்துள்ளார். குருபரஹள்ளி பகுதியில் உள்ள செங்குத்தான சரிவான சாலையில் லாரி வந்தபோது, பாரம் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது லாரி பலமாக மோதியது. அந்த காரில் ஓட்டுநர் அம்பதாஸ் (22) என்பவர், விமான நிலைய சவாரிக்காகக் காத்திருந்தபோது உள்ளேயே தூங்கிக்கொண்டிருந்தார். லாரி மோதிய வேகத்தில் கார் சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அம்பதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரின் மீது மோதிய லாரி நில்லாமல் அருகில் இருந்த பழைய இரும்பு குடோன் மீது மோதி நின்றது. மோதிய வேகத்தில் குடோனில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். லாரி ஓட்டுநர் சர்மா, லாரி மோதும் முன்பே கீழே குதித்து உயிர் தப்பினார். அவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.