
வாஷிங்டன், ஏப்ரல் 1-
அமெரிக்காவுடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, விமான பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விமான போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போரிடவில்லை. தற்போது அந்த நாடுகளில் விமான பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு 2 ஆலோசனைகளை கூற விரும்புகிறேன். அமெரிக்காவிடம் போதுமான விமான பெட்ரோல் இருக்கிறது. எங்களிடம் இருந்து நல்ல விலை கொடுத்து விமான பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம். ஒருவேளை அமெரிக்காவிடம் வாங்க விருப்பம் இல்லை என்றால் 2-வது ஆலோசனையை கூறுகிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் நேரடியாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு சென்று உங்களுக்கு தேவையான விமான பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இனிமேல் உங்களை தற்காத்து கொள்ள நீங்களே போரிட கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அமெரிக்காவுக்கு உதவி செய்யவில்லை. நாங்களும் உங்களுக்கு உதவி செய்ய மாட்டோம். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

















