
புதுடெல்லி, ஏப்ரல் 15- குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார். இது குறித்து குடியரசு துணைத் தலைவர் சிபிஆர், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவருக்கும் வளமும், நலமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிரம்பிய சிறந்த ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய பிரார்த்தனை செய்தோம். தமிழ்ப் புத்தாண்டு நமது முன்னோர்களின் ஞானத்தை வெளிப்படுத்துவதுடன் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வைப் போற்றும் ஒப்பற்ற விழாவாக கொண்டாடப்படுவது பற்றி கலந்துரையாடினோம். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு தினத்தில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் காட்சிப்பதிவையும் சிபிஆர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவரது பூஜை அறையில் இந்து கடவுள்களின் படங்களுக்கு பிரதமர் மோடி தீபாராதனை செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. முன்னதாக வாசல் வரை வந்து பிரதமர் மோடியை மாளிகையினுள் சிபிஆர் அழைத்து வரும் காட்சி உள்ளது. அதேபோல், பிரதமரை வாசல் வரை சென்று வழியனுப்பும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த பிரதமருக்கு முருகன் படத்தை நினைவுப் பரிசாக சிபிஆர் அளித்தார். இந்த சந்திப்பை பிரதமர் மோடியும் தனது முகநூல் பக்கத்தில் படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் பிரதமர் மோடி, ‘சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.


















