
புதுடெல்லி, ஏப்ரல் 15- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும், மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட எண்ணெயை மட்டும் கொள்முதல் செய்ய கடந்த மாதம் அமெரிக்கா தற்காலிக விலக்கை இந்தியாவுக்கு அளித்தது. இதன் அடிப்படையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கப் போவதாக உலகின் 3-வது பெரிய நுகர்வு நாடான இந்தியா அறிவித்திருந்தது. இதற்கிடையில், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களை முற்றுகையிடப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட தற்காலிக விலக்கு மற்றும் தற்போதைய கொள்முதல் நடவடிக்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெயைக் ஏற்றிக் கொண்டு வந்த இரு ஈரானிய கப்பல்கள் இந்தியாவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பெலிசிட்டி. தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத்தின் சிக்கா துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்டது. இது மார்ச் மாத நடுப்பகுதியில் ஈரானின் கார்க் தீவிலிருந்து எண்ணெயை ஏற்றி வந்தது.


















