
பெங்களூரு, ஏப்ரல் 15 –
யோகேஷ் கவுடா கொலை வழக்கில் கர்நாடக மாநிலம் தார்வாட் கிராமப்புரத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி குற்றவாளி என மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் இன்று முக்கியத் தீர்ப்பு அளித்துள்ளது
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கௌடா கொலை வழக்கில், என்ன தண்டனை என்பதை நாளை அறிவிக்கப்போவதாக சிறப்பு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொலை வழக்கில் 21 குற்றவாளிகள் உள்ளதாகக் கூறியுள்ள நீதிமன்றம், 20 மற்றும் 21-வது குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து, மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
2016-ல் இந்தக் கொலை நடந்தபோது, கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யோகேஷ் கௌடா சிறையில் இருந்தபோதே மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த வினய் குல்கர்னியின் பெயர் இந்தக் கொலையில் குறிப்பிடப்பட்டதும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, குற்றப்பத்திரிகையில் வினய் குல்கர்னியை 15வது குற்றவாளியாகப் பெயரிட்டிருந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 2016ல் மாவட்ட பஞ்சாயத்து சபா பவனில் அமைச்சர் வினயுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜூன் 15 அன்று, தார்வாட், சப்தபுராவில் உள்ள உதய் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது யோகேஷ் கௌடா கொடிய ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.


















