
புதுடெல்லி, ஏப்ரல் 17-
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ‘பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2023’, ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சட்டம் நடைமுறைக்கு வராதவரை அதில் திருத்தங்களைக் கொண்டுவர இயலாது என்பதால், சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, நேற்றைய தினம் (ஏப்ரல் 16) முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மசோதா சட்டமான போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படாத வரை அரசியலமைப்பின் அங்கமாக மாறாது என்பதைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாரி சக்தி வந்தன் அதினியம்:
கடந்த 2023 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணியளவில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், இதற்கு ஒருமனதாக ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
வரும் 2029-ஆம் ஆண்டு முதல் இந்த இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர விவாதங்கள் நடக்கின்றன. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே, பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாணையின்படி, “2023-ஆம் ஆண்டின் 106-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 1-ன் உட்பிரிவு (2)-ன் கீழ் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வருகிறது” என்று உயர்மட்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்களும் அமளியும் ஏற்பட்டுள்ளன.
தேசமெங்கும் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் அமல்.
நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் தொடர்ச்சியாக
இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2029 முதல் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.




















