
ஹாசன், ஏப்ரல் 20-
ஏரியில் கால் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மாமா நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹாசன் மாவட்டம் அரசீகெரே தாலுகாவிலுள்ள என்.ஹொசள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் (12) மற்றும் அவரது மாமா பிரபாகர் (45) ஆகியோரே உயிரிழந்த துரதிர்ஷ்டசாலிகள். கோடை விடுமுறைக்காக பிரதீக் தனது மாமன் வீட்டிற்கு வந்திருந்தார். ஏரிக்கரை மீது இருவரும் நடந்து சென்றபோது, பிரதீக் எதிர்பாராதவிதமாக கால் தவறி ஏரிக்குள் விழுந்துள்ளான்.
அவனைக் காப்பாற்ற பிரபாகர் ஏரியில் இறங்கியுள்ளார். ஆனால், அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து கண்டசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல்
காவேரி ஆற்றில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி ஆனார்கள்.
பிரியாப்பட்டணத்தின் தொட்ட ஹரவே கிராமத்தின் அருகே காவேரி ஆற்றில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கணேஷ் (22) மற்றும் இம்ரான் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நகரில் டைல்ஸ் மற்றும் பெயிண்டிங் வேலை செய்து வந்த நான்கு இளைஞர்கள் நேற்று மதியம் நீந்துவதற்காக ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். கணேஷின் உடல் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இம்ரானின் உடல் நீண்ட தேடுதலுக்குப் பிறகு இன்று காலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக பைலகுப்பே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


















