
வாஷிங்டன்: ஏப்ரல் 21-
நாளை நள்ளிரவுடன், ஈரான்-அமெரிக்கா இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா குழு, பாகிஸ்தான் செல்கிறது. இந்த நேரத்தில், டிரம்ப் போட்டிருக்கும் சோஷியல் மீடியா பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போரில் நாங்கள்தான் ஜெயித்திருக்கிறோம் என்றும், அமெரிக்கா நடத்திய தாக்குதலால், ஈரானுக்கு தினமும் ரூ.4,175 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார். டிரம்ப் இந்தப் போரில் தான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாகக் கூறுகிறார். அமெரிக்கா தோற்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதாகவும், ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது என்றும் அவர் சாடியுள்ளார். ஈரான் ராணுவம் நிலைகுலைந்துள்ளதாக டிரம்ப் சில பட்டியல்களை போட்டிருக்கிறார். ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், விமானப்படை முடங்கியுள்ளதாகவும், ஏவுகணை அல்லது விமான எதிர்ப்புத் தற்காப்பு அமைப்புகள் அவர்களிடம் இப்போது இல்லை என்கிறார். ஈரானின் முன்னாள் தலைவர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுவிட்டனர் அல்லது மறைந்துவிட்டனர் என்றும், இது ஒரு வகை ‘ஆட்சி மாற்றம்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். டிரம்பின் பதிவில் உள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான். அதாவது ஒரு முறையான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்தத் தடையை நீக்கப்போவதில்லை என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த முற்றுகையால் ஈரானுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4,175 கோடி) நஷ்டம் ஏற்படுவதாகவும், இது தொடர முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறுகிறார்.




















