
திருப்பதி, ஏப்ரல் 22- திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி எம்.ரவிசந்திரா தலைமையில் தேசிய சிவில் சேவைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதில் ரவிசந்திரா பேசியதாவது: ஏழுமலையானுக்கு சேவை செய்வது எனது பாக்கியம். பக்தர்களுக்கு உண்மையான அன்பு மூலம் செய்யும் சேவையே உன்னதமானது. தேசிய சிவில் சேவைகள் தினம் என்பது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை. சேவை செய்யும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். மக்கள் – அரசு இடையே அரசு பணியாளர்கள் ஒரு சேவகர்களாக, பாலமாக பணியாற்றிட வேண்டும். நாம் அனைவரும் ஓய்வு பெறும் வரை அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சட்டங்களை மீறாமல் பணி செய்திட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதேபோல், அனைவருக்கும் புரியும் மொழியில் நாம் பேசினால்தான் விஷயமும் விரைவாக விளங்கும். முடிந்த அளவிற்கு தெலுங்கில் பேச பழகுங்கள். இவ்வாறு ரவிசந்திரா கூறினார்.



















