
புதுடெல்லி: ஏப்ரல் 22-
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கும்பல் தலைவனும், அந்நாட்டு உளவு (ஐஎஸ்ஐ) அமைப்பின் முகவருமான ஷாசாத் பாட்டி என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த 2 பேரை டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு நேற்று கைது செய்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் துணை ஆணையர் பிரவீன் குமார் திரிபாதி கூறும்போது, “மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த ராஜ்வீர் (21) மற்றும் விவேக் பஞ்சாரா (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லி- என்சிஆர் பகுதியில் துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுத் தாக்குதல்கள் மற்றும் திட்டமிட்ட கொலைகளைச் செய்யத் தீட்டப்பட்டிருந்த ஒரு பெரிய குற்றச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்களைக் கவர்ந்து, அவர்களை டெல்லி-என்சிஆர் பகுதியில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தி வந்த ஷாசாத் பாட்டி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்புள்ள கையாட்களின் சதியை இது அம்பலப்படுத்தியுள்ளது” என்றார்.
வழக்கின் பின்னணி: டெல்லியில் கையெறி குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் 16-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரின் டப்ராவில் இருந்து விவேக் பஞ்சாரா முதலில் கைது செய்யப்பட்டார். ஏப்.18-ல் விவேக் அளித்த தகவலின் அடிப்படையில், டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் ராஜ்வீர் கைது செய்யப்பட்டார். ராஜ்வீர் கைது செய்யப்பட்டபோது, ஷாசாத் பாட்டியின் உத்தரவின்படி டெல்லி- என்சிஆரில் உள்ள ஒரு முன்னணி ஓட்டலில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். அவரிடமிருந்து ஒரு பிஸ்டல், 6 தோட்டாக்கள் மற்றும் சதித் திட்டம் தொடர்பான வீடியோக்கள், குரல் பதிவுகள் கொண்ட இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


















