Home தலைப்பு செய்தி நாளை வாக்குப்பதிவு

நாளை வாக்குப்பதிவு

சென்னை: ஏப்ரல் 22-
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நாளை 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இளம் வாக்காளர்கள் வாக்களிக்க மிகவும் ஆர்வமுடன் காத்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்த முறை அதிகமான வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை வியாழக்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை​பெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார் ஈடுபடுகிறார்கள்.
ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் தேர்தல் தமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்காக அனல் பறக்க நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வு பெற்றது. இந்​தத் தேர்​தலில் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் இருந்தால் அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3022 இடங்களில் உள்ள 4,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட உள்ளது. முழுவீச்சில் ஏற்பாடுகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றன. வாக்குப்பதிவு நாளான நாளை காவல்துறையினர், தீ அணைப்பு வீரர்கள், வனத்துறையினர் என மொத்தம் 1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதிரடிப்படை வீரர்கள் தமிழகம் முழுவதும் 514 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.