
டெல்லி: ஏப்ரல் 23-
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விரைவில் வரலாறு காணாத அளவுக்கு உயரப் போகின்றன. ஏப்ரல் 29 அன்று 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக் கட்டம் முடிவடைந்த பிறகு மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி பங்கு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கோடாக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டீஸ் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரும் என கணித்துள்ளது.
தற்போது சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 120 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கும், ரீட்டெயில் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல் – டீசல் விலைக்கும் இடையே மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் தான் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் சுமையாக மாறி வருகிறது.
கோடாக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டீஸ் தற்போதைய கச்சா எண்ணெய் விலையான 120 டாலரை அடிப்படையாகக் கொண்டு தனது ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. எரிபொருள் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் செலவுக்கும் நுகர்வோருக்கு விற்கும் விலைக்கும் உள்ள இடைவெளி மிகப் பெரியதாக உள்ளது. எனவே இந்த இடைவெளியை நிரப்ப விலை உயர்வு தேவை. இருப்பினும், விலை உயர்வு ஒரே நாளில் மொத்தமாக கொண்டு வர வாய்ப்பில்லை. பல வாரங்கள் அல்லது மாதங்களில் படிப்படியாக உயர்த்தப்படும் என்று கோடாக் கூறுகிறது. பணவீக்க பாதிப்பை கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் சுத்திகரிப்பு நிறுவனங்களிந் நஷ்டத்தை குறைக்க உதவும் இந்த விலை உயர்வு கட்டாயமாகிறது. இதன் மூலம் இந்திய மக்கள் ரூ.25 முதல் ரூ.28 வரையிலான விலை உயர்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது பெரும்பாலான பெரு நகரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94 முதல் ரூ.96 வரை விற்கப்படுகிறது. இந்த உயர்வு நடைபெற்றால் விலை ரூ.120-க்கு அருகில் செல்லும்.


















