Home செய்திகள் தேசிய செய்திகள் விமானம் புறப்பட இருந்தபோது திடீர் தீ விபத்து

விமானம் புறப்பட இருந்தபோது திடீர் தீ விபத்து

புதுடெல்லி: ஏப்ரல் 26-
தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் மிக மோசமான விபத்து நொடிப் பொழுதில் தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுவிஸ் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து அதிர வைப்பதாக இருக்கிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், இதில் 6 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மற்ற பொது போக்குவரத்துக்களை விட விமான போக்குவரத்து உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது. இதனால் விமானங்களில் விபத்துகள் என்பது மிக அரிதாகவே ஏற்படும். இருப்பினும், விபத்து ஏற்படும்போது, அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அவை சர்வதேச அளவில் கவனம் பெறும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இன்று நடந்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுவிஸ் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் திட்டமிட்டபடி புறப்பட இருந்த நிலையில், ஒரே நொடியில் மோசமான விபத்து நடந்துள்ளது. இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திற்குப் புறப்பட வேண்டிய LX147 என்ற சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1:08 மணியளவில் ஓடுபாதையில் வேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் டேக்-ஆஃப் செய்யத் தொடங்கிய சில நொடிகளில், அதன் ஒரு என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
சரியான நேரத்தில் தீயைக் கவனித்த விமானிகள், உடனடியாக விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒருவேளை தீயைக் கவனிக்காமல் அவர்கள் டேக் ஆஃப் செய்திருந்தால் மிக மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும். இருப்பினும், விமானிகள் துரிதமாகச் செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட பிறகு, விமானத்தில் இருந்த 228 பயணிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளிட்டோர் அவசரக்கால பாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், அவசரக்கால ஸ்லைடுகளில் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 6 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.