Home மாவட்டங்கள் பெங்களூர் கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானல் ஓய்வு முடித்துசென்னை சென்றார் முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல்: ஏப்ரல் 29-
குடும்பத்துடன் கொடைக்கானலில் 4 நாட்கள் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை (ஏப.29) காலை சென்னைக்கு புறப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்தார். இதற்காக, அவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் அங்கிருந்து மதுரைக்கு வந்தார். இதன் பின்னர், கார் மூலம் கொடைக்கானலுக்கு வந்த அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார்.
முதல்வர் வருகையையொட்டி, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தினமும் காலை முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வருடன் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நடைப்பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அறையிலேயே ஓய்வெடுத்தார். நேற்று தனியார் அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில், மாரியம்மன் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். இந்நிலையில், முதல்வர் பயணத்திட்டப்படி இன்று (புதன்கிழமை) சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, 4 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு இன்று (ஏப்ரல் 29) காலை 8.50 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு காரில் மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து பகல் 12 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.