
அபுதாபி: மே 16-
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் உள்ள பெட்ரோலிய சேமிப்பகத்தில் 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சேமிக்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தின் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘இந்திய மூலோபாய பெட்ரோலிய இருப்பு நிறுவனம்’ மற்றும் ‘அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
தற்போது மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஒரு மிகப்பெரிய பலத்தையும் அசுர பலத்தையும் அளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள்.
இதுமட்டுமன்றி, இந்தியாவில் அதிநவீன எரிவாயு சேமிப்பு முறையை நிறுவுவதற்கும் இரு நாடுகளும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் யுஏஇ இடையே நீண்ட கால எல்பிஜி விநியோக ஒப்பந்தத்திற்கும் இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் யுஏஇ ஒரு மிக முக்கியமான பங்காளியாகத் திகழ்கிறது. கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் எல்பிஜி விநியோகம் உள்ளிட்ட விரிவான எரிசக்தி கூட்டாண்மைக்கான புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.”
5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும்.
எரிசக்தி துறை மட்டுமன்றி, பிற துறைகளிலும் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வங்கித் துறை, உள்கட்டமைப்ப மற்றும் நிதித் துறைகளில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக யுஏஇ அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் வழித்தடங்களின் பாதுகாப்பு, கப்பல் கட்டுதல் மற்றும் நவீன கணினி தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றத்தின் பின்னணியில், ஹார்முஸ் நீர்ச்சந்திவழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக வழித்தடங்களின் தொடர்ச்சியான இயக்கத்தின் அவசியத்தை இரு நாடுகளும் இந்த சந்திப்பில் பலமாக வலியுறுத்தியுள்ளன.



















