
போபால்: மே 16-
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகம் உள்ளது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்கள் வாதிடுகின்றனர். அதேசமயம் அது கமல் மவுலா மசூதி என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு கடந்த 2003-ல் இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினரையும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏஎஸ்ஐ அனுமதி அளித்தது.இதுதொடர்பான வழக்கில் ம.பி. உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா, அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வரலாற்று இலக்கியங்களும் ஆவணங்களும், சர்ச்சைக்குரிய பகுதியின் இயல்பு – பார்மர் வம்சத்தை சேர்ந்த மன்னர் போஜருடன் தொடர்புடைய ஒரு சமஸ்கிருத கற்றல் மையமான போஜசாலையாகவே இருந்ததை நிலைநாட்டுகின்றன.
மேலும் போஜர் காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இலக்கிய மற்றும் கட்டிடக்கலை குறிப்புகள், அங்கு சரஸ்வதி தேவி கோயில் இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அது சரஸ்வதி கோயில்தான். லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், ‘‘ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. இந்து தரப்பினருக்கு வழிபடும் உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இனிமேல், அங்கு இந்து வழிபாடு மட்டுமே நடைபெறும்’’ என்றார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தார் மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்தி அல்லது தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



















