
சென்னை, மே 18- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே,
அடுத்த 2 போட்டிகளுமே சிஎஸ்கே அணிக்கு வாழ்வா சாவா போட்டிகளாக அமைந்துள்ளன. எனவே, இந்த லீக் போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிஎஸ்கே அணி வீரர்கள் பெரு முயற்சி செய்வர் என்பதில் சந்தேகமில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் தோல்வி கண்டது. அதற்கு முந்தைய 3 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டிருந்தனர். ஆனால் லக்னோ உடனான போட்டியில் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.
மேலும் பேட்டிங்கின்போது முன்வரிசை வீரர்கள் யாருமே தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் பட்டேல் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
எனவே, இன்றைய போட்டியில் இவர்கள் மட்டையை சுழற்றும்போது அது அணிக்கு வெற்றிவாய்ப்பைத் தேடித் தரும். அதுபோலவே கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பர் என எதிர்பார்க்கலாம்.



















