Home விளையாட்டு சிஎஸ்கே அணியுடன் பயணம் செய்யாத தோனி

சிஎஸ்கே அணியுடன் பயணம் செய்யாத தோனி

அகமதாபாத், மே 21- 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி அணியிலிருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத அவர், சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் மட்டுமே மீண்டும் அணியில் இணைவார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்திற்காகச் சிஎஸ்கே அணி அகமதாபாத் சென்றுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, தோனி தற்போது அணியுடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். தோனிக்கு சமீபத்தில் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதற்காக ஓய்வு எடுத்து வருவதாகவும் ஹசி தெரிவித்தார். ஹசி அளித்த விளக்கம் மைக்கேல் ஹசி இது குறித்துக் கூறுகையில், “தோனி இப்போது எங்களுடன் இல்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். அவருக்குக் கட்டைவிரலில் சிறிய காயம் உள்ளது, அது தற்போது குணமாகி வருகிறது. குஜராத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் இன்னும் தயாராகவில்லை. ஆனால், ஒருவேளை நாங்கள் இந்தப் போட்டியில் வென்று பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டால், தோனி நிச்சயம் மீண்டும் அணியில் வந்து இணைவார். அவர் பிளே-ஆப் போட்டிகளில் விளையாடுவார் என நம்புகிறோம்,” என்றார். ஏமாற்றத்தில் வீரர்கள் கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் வாய்ப்பைக் கடினமாக்கியுள்ளது. அந்தத் தோல்விக்குப் பிறகு வீரர்களின் மனநிலை சற்று சோர்வாக இருந்ததை ஒப்புக்கொண்ட ஹசி, “ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி எங்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்தது. டிரஸ்ஸிங் ரூமில் அனைவரும் சோகமாக இருந்தோம். ஆனால், பயிற்சியாளர் எங்களிடம் பேசி உற்சாகப்படுத்தினார். எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது, அதில் வென்று முன்னேற வேண்டும் என்பதே இப்போது எங்களின் ஒரே குறிக்கோள்” எனத் தெரிவித்தார்.