
சென்னை: மே 21 –
சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி பினாமி சொத்துகளை அமலாக்கத் துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தங்கம் ஸ்டீல் லிமிடெட் மற்றும் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய எஃகு உற்பத்தி நிறுவனங்கள், பாரத் ஸ்டேட் வங்கியில் ரூ.311 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
வங்கி அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையில், இரு நிறுவனங்களின் இயக்குநர்களும், 2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் போலியான நிதி அறிக்கைகள், போலி குடோன் மற்றும் போக்குவரத்து ரசீதுகளைக் காட்டி கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.
மேலும், வங்கிக்கு ஒரு கணக்கையும், நிறுவனப் பதிவாளருக்கு வேறொரு கணக்கையும் காட்டி, சுழற்சி முறை வர்த்தகம் மூலம் பணத்தை போலி நிறுவனங்களுக்கு திசைதிருப்பி தனிப்பட்ட சொத்துகளை வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதன்மூலம் பாரத் ஸ்டேட் வங்கிக்கு சுமார் ரூ.311 கோடி இழப்பு ஏற்படுத்தி சட்ட விரோத லாபத்தையும் அந்த நிறுவனங்கள் சேர்த்திருப்பதை அமலாக்கத் துறை கண்டிபிடித்தது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறைஅதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, மோசடி பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளை வங்கி ஜப்தி செய்யாமல் இருக்க, தங்களது தூரத்து உறவினர்கள், பினாமிகளின் பெயர்களில் சொத்துகளைப் பதிவு செய்திருந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனையின் மூலம், பினாமிகளின் பெயர்களில் உள்ள ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது.
மேலும், மோசடி தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள், முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

















