Home மாவட்டங்கள் பெங்களூர் தவெக – திமுக ‘இன்ஸ்டா’ யுத்தம்

தவெக – திமுக ‘இன்ஸ்டா’ யுத்தம்

சென்னை: மே 23-
“நாங்கள் கோட்டை விட்ட இடம் இன்ஸ்டாகிராம் தான்” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு இரண்டே ஆண்டுகளில் தமிழத்தின் அரசியல் திசையை தன்வசப்படுத்தியுள்ளது விஜய்யின் தவெக. ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம், ‘பஞ்ச்’ உடன் கூடிய பேச்சு நடை அறிக்கைகள் என தனது உத்திகளை அதிரடியாக மாற்றி, தவெகவை எதிர்கொள்ள புதிய டிஜிட்டல் பாய்ச்சலை தொடங்கியுள்ளது திமுக.தேர்தல் களம் கொடுத்த பலத்த அடிக்குப் பிறகு, 70 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட அறிவாலயம் இப்போது ‘திராவிட மாடல் 2.0’ கனவை கலைத்துவிட்டு ‘டிஜிட்டல்’ அவதாரத்துக்கு தயாராகி வருகிறது. இது, இனி வரும் காலங்களில் ஆளும் தவெகவுக்கு ‘டஃப்’ கொடுக்க கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி, 34.92 விழுக்காடு வாக்குகளுடன் அரசியல் களத்தில் சாதனை படைத்துள்ளது. மறுபுறம், 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, வெறும் 59 இடங்களை மட்டுமே வென்று, 74 இடங்களை இழந்து பலத்த சரிவைச் சந்தித்துள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய நாள் முதலே டிஜிட்டல் களத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. மாநாட்டு அறிவிப்பு முதல் கொள்கைப் பாடல் வரை, ஒவ்வொரு நகர்வும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், எக்ஸ் ட்ரெண்டிங் என இளைஞர்களைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது.
முதல் மாநாட்டிலேயே லட்சக்கணக்கானோர் லைவ் பார்த்ததும், #TVK என்கிற ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட் ஆனதும் திமுகவுக்கு ‘அலர்ட்’ செய்தியைச் சொல்லியது. விஜய் குறைவான இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்திருந்தாலும், தனது பஞ்ச் வசனங்களாலும் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் முழங்கியது எடுபட்டது.
பாரம்பரியக் களப்பணி மற்றும் வலுவான கட்சிக் கட்டமைப்பு போன்ற திமுகவின் வழக்கமான சாதக அம்சங்கள் எதுவும் இந்தத் தேர்தலில் போதிய பலன் அளிக்கவில்லை. மாறாக, 18 முதல் 30 வயது வரையிலான இளம் வாக்காளர்களைச் சென்றடைய மீம்ஸ்கள், வீடியோ எடிட்கள், ட்ரெண்டிங் ஆடியோக்கள் போன்ற நவீன டிஜிட்டல் ஆயுதங்களையே தவெக கையில் எடுத்தது. இந்த டிஜிட்டல் ஆட்டத்தில் தவெக பல அடிகள் முன்னேறி நின்றது.