
பெங்களூரு: மே 26-
பணத் தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கொடூரமான முறையில் கொலை செய்து, கும்பளகோடு ராமசந்திரா ஏரி அருகே உள்ள பாழடைந்த பகுதியில் உடலைப் புதைத்த ஒருவரை கும்பளகோடு போலீஸார் கைது செய்துள்ளனர்.
தாவரெகெரெ உதயா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரக்ஷித்.என் (25) என்பவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மொஹின் பாஷாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஹசன் என்பவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவரான ரக்ஷித்.என், கம்பீபுராவைச் சேர்ந்த தனது நண்பர் மொஹின் பாஷாவுக்கு பணம் கொடுத்திருந்தார். கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு வருவதாகக் கூறி மே 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து, மே 25-ஆம் தேதி ரக்ஷித்தின் தாய் கம்பீபுராவுக்குச் சென்று மொஹின் பாஷாவிடம் தனது மகனைப் பற்றி விசாரித்துள்ளார். அப்போது, பண விவகாரம் தொடர்பாக ரக்ஷித்துடன் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து, உடலை ராமசந்திரா ஏரி அருகே புதைத்துவிட்டதாகவும், அவரது ஆட்டோவை ஞானபாரதி அருகே விட்டுச் சென்றதாகவும் மொஹின் பாஷா உண்மையை வாயைத் திறந்து ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ரக்ஷித்தின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மொஹின் பாஷாவை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது புதைக்கப்பட்டிருந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக கும்பளகோடு காவல் நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.


















