
புதுடெல்லி, மே 26- வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு பிறகு, என்டிஏ மற்றும் எதிர்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 24 எம்.பி. பதவிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்டிஏ) வசம் 15 உள்ளன. இதில் பாஜகவில் மட்டும் 12 பேரின் பதவிக் காலம் முடிகிறது. இதுபோல் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்கிரஸின் 4 எம்.பிக்கள், ஜேஎம்எம் கட்சியின் ஓர் எம்.பி. என 5 பேரின் பதவிக்காலம் முடிகிறது. இது தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 3 எம்.பி.க்கள் உள்ளிட்ட பிற கட்சி எம்.பி.க்களின் பதவிக் காலமும் முடிகிறது. இந்த தேர்தலில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் என்டிஏ 17, எதிர்க்கட்சிகள் 7 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதனால் என்டிஏ கூட்டணிக்கு 2 இடம் கூடுதலாக கிடைக்கும். காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் வலுவான நிலையில் உள்ளது. எனினும், குஜராத்தில் இருந்து மாநிலங்களவையில் அக்கட்சியின் பிரதிநிதித்துவமே முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனது 3 எம்.பி.க்களையும் இழக்கும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைவர் சி.வி.சண்முகம் எம்எல்ஏவாக தேர்வானதால் அவரது எம்.பி. பதவி காலியானது. இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டுக்கான இடைத் தேர்தலே அனைவராலும் அதிகம் பேசப்படுவதாக உள்ளது. ஏனெனில், நடிகராக இருந்து அரசியல்வாதியான முதல்வர் விஜய்யின் கட்சியான தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. எனினும் அக்கட்சி மாநிலங்களவையில் முதன்முறையாக அடியெடுத்து வைக்குமா ? அல்லது அந்த இடத்தைத் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது இடைத்தேர்தல் என்பதால் அதை, காங்கிரஸுக்கு வழங்கி விடலாம் என முதல்வர் விஜய் கருதுவதாக தகவல்கள் வெளியாகின்றன.


















