
பீதர்: மே 26-
கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் நிதி மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. தமிழக எல்லையோர மாவட்டங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரூ.45 கோடி ஊழல் வழக்கில், தற்போது லோகாயுக்தா போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் உள்பட 6 பேரை போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு: பிரபசர் எச்.டி. நாராயணசுவாமி (முன்னாள் துணைவேந்தர்)
கே.எல். சுரேஷ் (2017-18 காலகட்டத்தின் நிதி கட்டுப்பாட்டு அதிகாரி) மிருத்யுஞ்சய ஹிரேமத் பொப்பண்ணா மஞ்சுநாத் ராமகொண்டா ஆகும்.
கடந்த 2017-18-ஆம் ஆண்டு காலகட்டத்தில், பல்கலைக்கழகத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கியதாகக் கூறி, போலி பில்களைத் தயாரித்து ரூ.45 கோடிக்கும் அதிகமான பொதுமக்களைப் பணத்தை அதிகாரிகள் சுருட்டியுள்ளனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில், கடந்த 2021-ஆம் ஆண்டு லோகாயுக்தா போலீசார் முதற்கட்ட சோதனையை நடத்தினர்.
அதன்பின்னர் விசாரணையைத் தீவிரப்படுத்திய லோகாயுக்தா அதிகாரிகள், கடந்த 2025 செப்டம்பர் 10 அன்று மாநிலம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட்டுச் சேர்ந்து, எந்தவொரு பொருளையும் வாங்காமலேயே போலி பில்களை உருவாக்கிப் பணத்தைக் கொள்ளையடித்தது விசாரணையில் அக்குவேறு ஆணிவேறாக நிரூபணமானது.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த பீதர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாய்ந்த லோகாயுக்தா போலீசார், முன்னாள் துணைவேந்தர் நாராயணசுவாமி உள்பட 6 பேரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
லோகாயுக்தா உயர் அதிகாரிகள் மணீஷ் கர்பிகர், சுப்ரமண்யேஸ்வரா, பத்ரிநாத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, எஸ்பி சித்தராஜு மேற்பார்வையில், பீதர் லோகாயுக்தா டி.எஸ்.பி ஹனுமந்தராயா தலைமையிலான தனிப்படையினர் இந்த அதிரடி வேட்டையை நடத்தி குற்றவாளிகளைக் கூண்டோடு பிடித்துள்ளனர்.


















