Home செய்திகள் உலக செய்திகள் 6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை

6 பேரை சுட்டுக்கொன்று கொலையாளி தற்கொலை

மஸ்கடீன் (அமெரிக்கா), ஜூன் 2-
அமெரிக்காவின் மஸ்கடீன் நகரில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் சுட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிக்காரன் உள்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஸ்கடீன் நகரைச் சேர்ந்த ரயான் வில்லிஸ் மெக்ஃபார்லாண்ட் (வயது 52) என்பவரே இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த கொலையாளி என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மஸ்கடீன் நகரில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசாருக்கு மதியம் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஒரே வீட்டில் நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் குற்றவாளியான ரயான் வில்லிஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசித் தேடினர். இறுதியில் போலீசார் அவரைச் சுற்றி வளைத்து, சரணடையுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரயான் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறொரு வீடு மற்றும் உள்ளூர் அலுவலகம் ஒன்றில் தலா ஒரு ஆண் சடலம் (மொத்தம் 2 சடலங்கள்) கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், இவர்களையும் அந்த கொலையாளியே சுட்டுக் கொன்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து மஸ்கடீன் போலீஸ் அதிகாரி அந்தோணி கீஸ் கூறும்போது,
இது குடும்பத் தகராறு காரணமாக நடந்த கொடூரச் சம்பவம். உயிரிழந்த 6 பேரும் கொலையாளி ரயானின் உறவினர்கள் ஆவர். ஒட்டுமொத்த நகரையே உலுக்கியுள்ள இந்த கொடூரச் செயலை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை”
என்று தெரிவித்தார்.
தற்போது பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.