
டெல்லி, ஜூலை 22- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினர் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். டெல்லி போர்க்களமாக மாறியது. இந்நிலையில் தான் டெல்லியில் பிரச்சனை வெடிக்கலாம் என்று கடந்த 17ம் தேதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வார்னிங் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முன்கூட்டியே எப்படி அமெரிக்க தூதரகம் வார்னிங் கொடுத்தது, இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ’நீட்’ வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. கல் வீசப்பட்டது. சில போராட்டக்காரர்கள் போலீஸ்கார்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். மேலும் நேற்றைய தினம் டெல்லியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அதுமட்டுமின்றி தற்போது வரை போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் பிரச்சனை வருவதை முன்கூட்டியே அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் சார்பில் கடந்த 17 ம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.












