Home மாவட்டங்கள் சென்னை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற போராட்டம்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற போராட்டம்

சென்னை: அக். 5-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, சென்னையில் 19 இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சென்னை வரவுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் முன்னதாக நடத்தப்பட்டது.
மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மனோகர் தலைமை வகித்தார். கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் பங்கேற்றார். மணலி, பெரம்பூர், ஆர்.கே.நகர், தி.நகர், எழும்பூர், பட்டாளம், அண்ணாநகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், போரூர், மதுரவாயல், வேளச்சேரி உள்ளிட்ட 19 முக்கிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
கொளத்தூர் ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கு ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும், முந்தைய திமுக அரசு அதை அமல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போதைய தவெக அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தீபம் ஏற்றுவதைத் தடுத்து வருவதாகவும் அவர் கூறினார். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
வரும் கார்த்திகை 1-ஆம் தேதி தீபத் தூணில் தீபம் ஏற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்து முன்னணி 40 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டு மாநிலத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். அனுமதி கிடைத்தால் முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம். நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதே அரசின் கடமை என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.