
புதுடெல்லி: ஜூன் 10-
உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரங்களில் காசி எனும் வாராணசி மிகவும் பிரசித்தி பெற்றது. பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான இங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றாக ரூ.100 கோடியில் 20 ஏக்கரில் வாராணசியின் பேலுபூர் பகுதியில் ஆக்சிஜன் பூங்கா உருவாக்கப்படுகிறது. மாநகராட்சி சார்பில் ‘சிவ தீம் பார்க்’ என்ற பெயரில் இந்தப் பூங்கா அமைகிறது. இந்தப் பூங்காவில் காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமான் கருப்பொருளாக இருப்பார். உலகத் தரத்தில் இந்தப் பூங்கா அமைகிறது. அடுத்த 8 முதல் 9 மாதங்களுக்குள் இந்தப் பூங்காவில் பிரம்மாண்ட நடைபாதை, குழந்தைகளுக்கான நவீன ஊஞ்சல்கள், திறந்தவெளி கலைக்கூடம், முதியோர் நூலகம், பிரம்மாண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு அரங்கம் ஆகியவை இடம்பெறும்.
மேலும், காசியைச் சேர்ந்த பத்ம விருது பெற்ற ஆளுமைகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் சாதனைகளும் இங்கு காட்சிப்படுத்தப்படும். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் துறையில் ஈர்க்கும் வகையில், இங்கு ஒரு கோளரங்கம் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு ஆன்மிக அமைதியை அளிக்கும் வகையில் இப்பூங்கா வடிவமைக்கப்படும். இது வழிபாட்டு தலமாக இருப்பதுடன் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் நகர்ப்புறச் சுற்றுலாவுக்கான ஒரு முக்கிய மையமாகவும் அமையும். காசியின் தொன்மையான பாரம்பரியம், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் மற்றும் புராணக் கதைகளை எடுத்துரைக்கும் வகையில், இங்கு ஒரு நவீன டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. முக்கியமாக 130 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிவலிங்கம் இங்கு அமைக்கப்படுகிறது. தற்போது, கேரளாவின் செங்கலில் 111 அடி மகாலிங்கம் உள்ளது. பிஹாரின் கிழக்கு சம்பரானில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயணக் கோயிலிலும் ஒரு சிவ லிங்கம் அமைகிறது. ஒற்றைக் கல்லால் ஆன இந்த சிவலிங்கம் 33 அடி உயரம் கொண்டது. இதை தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் உள்ள சிற்பிகள் வடித்து சமீபத்தில் பிஹார் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


















