
பெங்களூரு: ஜூன் 11–
பெங்களூருவில் கொலை முயற்சி, வழிப்பறி, மிரட்டல் எனப் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
இதுபற்றிய பரபரப்பான பின்னணி விவரம் வருமாறு:
பெங்களூரு ஹெப்பகோடி பகுதியைச் சேர்ந்தவன் ஜீவா (வயது 19). இளம் வயதிலேயே கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டல் எனப் பெரிய ரவுடியாக வலம் வந்த இவன் மீது போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் உள்ளது. கடந்த வாரம் ஹெப்பகோடி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு போலீசாருக்குப் போக்கு காட்டி தப்பியோடினான்.
இவனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை சிங்கேனா அக்ரஹாரா பகுதியில் உள்ள ஒரு தோப்பில் ரவுடி ஜீவா பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே ஹெப்பகோடி போலீசார் அந்தத் தோட்டத்தைச் சுற்றிலும் வளைத்தனர்.
போலீஸ் வாகனத்தைக் கண்டதும் ரவுடி ஜீவா தப்பியோட முயன்றான். அப்போது நாகேஷ் என்ற போலீஸ் காவலர் அவனைப் துரத்திச் சென்று பிடிக்க முயன்றார். உடனே, மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை எடுத்த ஜீவா, போலீஸ்காரரை வெட்டப் பாய்ந்தான்.
“ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டுச் சரணடை!” என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால், அதை கேட்காமல் ரவுடி ஜீவா மீண்டும் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றான் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பா, தற்காப்பிற்காகத் தனது துப்பாக்கியை எடுத்து ரவுடியின் காலை நோக்கிச் சுட்டார்.
துப்பாக்கி குண்டு, ரவுடி ஜீவாவின் காலில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்.
இதையடுத்து, உயிருடன் பிடிபட்ட ரவுடி ஜீவாவையும், காயமடைந்த போலீஸ் காவலர் நாகேஷையும் போலீசார் மீட்டு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துணிகர என்கவுண்டர் சம்பவம் குறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















