
புதுடெல்லி: ஜூன் 15-
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன்படி, டெல்லி முழுவதும் சுமார் 100 ஆட்டோ ரிக்ஷாக்களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்கா’ என்ற வாசகங்கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் ஓமன் வளைகுடாவில் உள்ள ‘எம்டி செட்டபெல்லோ’ என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் டெல்லி ஆட்டோ ரிக்ஷாக்களில் இடம்பெற்றிருந்த போஸ்டர்களை ஓட்டுநர்கள் கிழித்து எறிந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஆட்டோ ஓட்டுநர்கள் ட்ரம்புக்கு எதிராக முழக்கமிடுவதும், சக ஆட்டோ ஓட்டுநர்களை அந்த போஸ்டர்களை கிழிக்குமாறு வற்புறுத்துவதும் பதிவாகி உள்ளது. “அவர்கள் அங்கே நம் இந்தியர்களைக் கொல்கிறார்கள்” என்று ஒரு ஓட்டுநர் கூறுவதுடன், மற்றவர்கள் தங்கள் ஆட்டோவில் எந்தவொரு அமெரிக்க விளம்பரத்தையோ அல்லது செய்தியையோ வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறார். இந்த வீடியோ ‘இந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்துடன் முடிகிறது.
இந்த விவகாரத்தில், சிவிலியன் மாலுமிகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று இந்தியா, அமெரிக்க தூதர்களை இரண்டு முறை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த விவகாரத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் கொண்டு சென்றுள்ளார். முன்னதாக, மே மாதத்தில் இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டபோது, ஒரு பாக்கெட் தேயிலைக்காகவும், ஆட்டோவின் கிழிந்த கூரையை மறைப்பதற்காகவுமே தாங்கள் இந்த போஸ்டர்களை ஒட்ட சம்மதித்ததாக சில ஓட்டுநர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















