
அட்லாண்டா, ஜூன் 17- உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் – கேப் வெர்டே அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் கேப் வெர்டே அணியின் கோல் கீப்பரான 40 வயதாகும் வோசின்ஹா தனது அபார செயல் திறனால் உலக கால்பந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். கோல் கம்பத்தின் முன் சுவர் போல் நின்று ஸ்பெயின் அணியின் கோல் அடிக்கும் 7 வாய்ப்புகளை வோசின்ஹா தகர்த்தெறிந்தார். பந்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி, கோல் கம்பத்தை நோக்கி 27 முறை ஷாட்களை அடித்து ஸ்பெயின் அணி அசுர ஆதிக்கம் செலுத்திய போதிலும், அனுபவமிக்க கோல் கீப்பரான வோசின்ஹா மைதானத்தின் நாலாபுறமும் பறந்து தடுத்தார். இதனால் கோல் அடிக்க முடியாமல் ஸ்பெயின் அணியும் அதன் ரசிகர்களும் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஸ்பெயினின் இளம் சூப்பர் ஸ்டார் லாமின் யமால் மாற்று வீரராகக் களம் புகுந்தும் கூட, வோசின்ஹா மற்றும் கேப் வெர்டே அணியின் இரும்புக் கோட்டை போன்ற தற்காப்பை மீறி கோல் அடிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை மேடையில் கால்பதித்துள்ள கேப் வெர்டே அணி, தனது முதல் போட்டியிலேயே 2010-ம் ஆண்டின் உலக சாம்பியனும், இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக ஒரு புள்ளியைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.




















