
மும்பை: ஜூன் 18-
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக செய்திகள் வெளியாகின.
சிவசேனா கட்சியின் (உத்தவ்) எம்எல்ஏ.க்களில் 16 பேரும், எம்.பி.க்களில் 7 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர்கள் சிவசேனாவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவசேனாவின் (ஏக்நாத் ஷிண்டே) இந்த நடவடிக்கை, ஆபரேஷன் டைகர் என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த 14ம் தேதி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், சிவசேனா (உத்தவ்) எம்.பி.க்கள் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோருடன் இணைந்து சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சிவசேனா எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் யாரேனும் கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்பினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லட்டும். எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குறித்து இதுபோன்ற செய்திகள் தற்போது வருகின்றன. இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த எம்.பி.க்களின் வெற்றிக்காக எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஓய்வின்றி உழைத்துள்ளார். நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம்.
கட்சி மாறும் எம்.பி.க்களுக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், எம்.பி.க்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. குறைந்தது அவர்களுக்கு ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களை அழைத்துச் செல்ல 3 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவாதத்தை அடுத்தே அவர்கள் நான்டெட், புனே உட்பட 3 இடங்களில் இருந்து தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்குக் கூட தகுதியானவர்கள் கிடையாது. சிவசேனா கட்சி என்ற பெயர் காரணமாகவே இவர்களுக்கு இவ்வளவு மதிப்பு. எங்கள் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்சிக் குழுக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளோம். இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



















