Home விளையாட்டு சவுதியை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்.. உலகக் கோப்பையில் புதிய சாதனை

சவுதியை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்.. உலகக் கோப்பையில் புதிய சாதனை

அட்லாண்டா, ஜூன் 22- பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் எச் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், சவுதி அரேபியா அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் ஸ்பெயின் இளம் வீரர் லமின் யமால் தனது முதல் உலகக் கோப்பை கோலை பதிவு செய்தார். அட்லாண்டாவில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லமின் யமால், மிக்கெல் ஒயர்சாபல் கொடுத்த பந்தை துல்லியமாக கோலாக மாற்றி ஸ்பெயினுக்கு 1-0 என முன்னிலை தந்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் தனது முதல் கோலை அவர் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து மிக்கெல் ஒயர்சாபல் அடுத்த 3 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த நேரத்தில், அதாவது வெறும் 24 நிமிடங்களில் 2 கோல்கள் மற்றும் 1 அசிஸ்ட் செய்த முதல் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை ஒயர்சாபல் படைத்தார். ஆட்டத்தின் 24 நிமிடங்களிலேயே ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில், 49வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்க் குகுரெல்லா கோல் அடிக்க முயன்ற பந்து, சவுதி கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸால் தடுக்கப்பட்டது. ஆனால், அந்த பந்து எதிர்பாராதவிதமாக சவுதி தற்காப்பு வீரர் ஹசன் அல்-தம்பக்தி மீது பட்டு ஓன் கோலாக மாறியது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப் எச் பிரிவில் 4 புள்ளிகளுடன் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது.