
சிஜி: ஜூன் 30
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இந்நிலையில் சிஜி என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சேறு நிறைந்த சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மழை நீரில் நன்கு ஊறியிருந்த சாலையின் நிலப் பகுதி திடீரென சரிந்து சிஜி ஆற்றில் விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மணல், பாறைகளுடன் அடித்துச் செல்லப்பட்டார். இதில் பைக் ஒரு புறமும், அதில் பயணம் செய்தவர் ஒரு புறமும் விழுந்தனர்.
ஆனால் அந்த நபர் மணலில் இருந்து எழுந்து ஓடி மேலே வந்தார். இந்த வீடியோ காட்சிகளை ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அது வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலச்சரிவில் இவர் தப்பியது அதிசயம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


















