
பீதர்: ஜூன் 30-
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மனைவியை, இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார் ஒரு ராணுவ வீரர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் பீதரின் பால்கி தாலுகா காயமுக் கோவில் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் நடந்துள்ளது.
பீதர் தாலுகா ஹொன்னிகேரி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சனா (26) என்பவருக்கும், பகவத் ஞானேஸ்வர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வரும் பகவத், தனது மனைவியுடன் பீதரின் சிவனகரில் வசித்து வந்தார்.
இராணுவ வீரர் பகவத்திற்குப் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த விஷயம் மனைவி சஞ்சனாவிற்குத் தெரியவரவே, அவர் கணவனைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வெடித்துள்ளது.
இந்நிலையில், மனைவியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த பகவத், அவரை காரில் ஏற்றிக்கொண்டு ஹொன்னிகேரி காட்டுப் பகுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு காரை நிறுத்திவிட்டு, மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சஞ்சனாவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சஞ்சனாவை மீட்டு, சிகிச்சைக்காக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனைக்கூடத்தின் முன்பு கூடியிருந்த சஞ்சனாவின் குடும்பத்தினரின் கதறல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இச்சம்பவம் குறித்து தந்நூரா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி கணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


















