Home மாவட்டங்கள் பெங்களூர் ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

ஓட்டு இழந்தால் அரசு சலுகை இழப்பீர்- முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

பெங்களூர்: ஜூன் 30-
கர்நாடகாவில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடங்கியது. இதையொட்டி குடிமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் நிலை குறித்து முதல்வர் டி.கே.சிவக்குமார் பொதுமக்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இருப்பதை பொதுமக்கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், வாக்குரிமையை இழப்பவர்கள் அரசு வழங்கும் சலுகைகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வாக்குரிமை என்பது வாழும் உரிமை போன்றது. மேற்கு வங்காளத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அடிப்படையில் தகுதியற்ற ரேஷன் பயனாளிகளை சரிபார்த்து நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் இதர மாநிலங்களிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் வாக்குரிமையை இழந்தால், அரசு வழங்கும் சலுகைகளையும் இழக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகா முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணியை தேர்தல் ஆணையம் இன்று முதல் தொடங்கியது.. இந்தப் பணி வருகிற ஜூலை 29-ஆம் தேதி வரை நீடிக்கும்.நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், குடிமக்களுக்கு நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் அரசு அறிவித்துள்ளது. நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்களை வழங்குவது குறித்து வருவாய்த்துறை விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் முகவரிக்கான சான்றாகச் செயல்படும் என்று வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்தச் சான்றிதழுக்கு ‘சேவா சிந்து’) இணையதளம் மூலமாக ஆன்லைனிலும், அடல் ஜன சிநேகி கேந்திராக்கள் அல்லது நாட கச்சேரிகள், பெங்களூரு ஒன், கர்நாடகா ஒன் மற்றும் கிராம ஒன் போன்ற தற்போதைய குடிமக்கள் சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் உள்ள 5.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் திருத்தப் பணியின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இதற்காக மொத்தம் 59,050 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 7,556 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள், 224 தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் 336 உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட 1.1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 5.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களுக்காக இரண்டு செட் கணக்கெடுப்பு படிவங்களை நாங்கள் ஏற்கனவே அச்சிட்டுள்ளோம். அந்தப் படிவங்கள் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் சென்றடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை காலை முதல், அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவங்களை விநியோகிக்கத் தொடங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2026 ஜூன் 16 நிலவரப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவங்களை வழங்குவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் செல்வார்கள். படிவங்கள் விநியோகிக்கப்பட்ட வீடுகள் ஊதா நிற சதுர வடிவ ஸ்டிக்கர் மூலமும், பூட்டப்பட்ட வீடுகள் சிவப்பு நிற வட்ட வடிவ ஸ்டிக்கர் மூலமும் அடையாளப்படுத்தப்படும். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சேகரிக்க, தேவைப்படும் இடங்களில் அலுவலர்கள் குறைந்தது மூன்று முறையாவது நேரில் செல்வார்கள்.
கணக்கெடுப்பு கட்டத்தின் போது பொதுமக்களிடம் இருந்து எந்தவொரு ஆவணங்களும் சேகரிக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
“வாக்காளர்கள் தயவுசெய்து படிவத்தைப் பெற்று, அதைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தேர்தல் அதிகாரி அன்புகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தத் திருத்தப் பணி குறித்த அச்சங்களைப் போக்கும் வகையில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, “முழு செயல்முறையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சட்டப்படியும் மட்டுமே நடைபெறும். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித தவறான எண்ணமும் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.