
மான்டேரி: ஜூலை 1-
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று மெக்சிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ, நெதர்லாந்துடன் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. பந்தை தங்கள் வசம் வைத்திருப்பதில் இரு அணிகளும் 50-50 என சமநிலை வகித்தன. 20-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் நெயில் இலக்கை நோக்கி அடித்த பந்தை நெதர்லாந்து கோல் கீப்பர் பார்ட் வெர்ப்ரூஜென் அசாத்தியமாகத் தடுத்தார். முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை.72-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. நெதர்லாந்து அணியின் வீரர் வெகோர்ஸ்ட், கோல்கீப்பர் வெர்ப்ரூஜென் உதைத்த பந்தை சென்டர் சர்க்கிளுக்குள் தலையால் முட்டி சம்மர்வில்லிக்கு பாஸ் செய்தார். சம்மர்வில் 18 அடி தூர பாக்ஸின் விளிம்பிற்கு வேகமாக முன்னேறி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தடுமாறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் மொராக்கோ டிஃபென்டர் பந்தை கைப்பற்றுவதற்குள் வேகமாக ஓடிவந்த கக்போ தனது வலுவான ஷாட்டால் மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோவின் கால்களுக்கு ஊடாக பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் நெதர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 90 நிமிடங்கள் வரை நெதர்லாந்து அணி தனது முன்னிலையை தக்கவைத்திருந்தது.இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+1-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் பதிலி வீரர் செம்ஸ்டின் தால்பி கொடுத்த துல்லியமான கிராஸை, இசா தியாப் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் முதல் 4 வாய்ப்புகளில் நெதர்லாந்து அணி தரப்பில் கூப்மைனர்ஸ், வெகோர்ஸ்ட் ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்றினர். அதேவேளையில் க்ளூய்வர்ட், டிம்பர் ஆகியோர் கோல் தங்களது வாய்ப்பை வீணடித்தனர். மறுபுறம் மொராக்கோ அணி தரப்பில் ரகிமி, தால்பி ஆகியோர் கோல் அடித்தனர்.
ஹக்கிமி, எல் அயினாவ் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.கடைசி வாய்ப்பில் நெதர்லாந்து வீரர் கிறிசென்சியோ சமர்வில்லி அடித்த பந்தை மொராக்கோ அணியின் கோல் கீப்பர் யாசின் போனோ அற்புதமாக இடது கையால் தட்டி விட்டார். தொடர்ந்து மொராக்கோ அணியின் வீரர் இஸ்மாயில் சைபாரி அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. முடிவில் மொராக்கோ 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது. மொராக்கோ அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றில் வரும் 4-ம் தேதி கனடாவுடன் மோதுகிறது.





















