
மெக்சிகோ சிட்டி, ஜூலை 2- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ – ஈக்வடார் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில மெக்சிகோ அணியின் வீரர் ரொபர்ட்டோ ஆல்வராடோ கொடுத்த பாஸை பெற்ற ஜூலியன் குவினோன்ஸ் பாக்ஸின் விளிம்பிலிருந்து வலுவாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது.இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி 2-வது கோலை அடித்தது. 31-வது நிமிடத்தில் ஜூலியன் குவினோன்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற மெக்சிகோவின் சீனியர் நட்சத்திர வீரரான ரவுல் ஜிமினெஸ் பந்தை மிக நேர்த்தியாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் மெக்கிகோ 2-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டு கோல்கள் பின்தங்கிய ஈக்வடார் அணி ஆட்டத்தின் 2-வது பாதியில் பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்துக்கொண்டு பதிலடி கொடுக்க கடுமையாக முயன்றது. அந்த அணியின் வீரர் ஜான் யெபோவா இலக்கை நோக்கி அடித்த ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது. அதேவேளையில் மெக்சிகோவின் பலமான தற்காப்பு ஆட்டம் மற்றும் கோல்கீப்பர் ரவுல் ரான்ஜெலின் சிறப்பான செயல்பாடு காரணமாக ஈக்வடாரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.காயங்களுக்கு இழப்பீடா வழங்கப்பட்ட 90+5-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் சாண்டியாகோ கிமினெஸுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, விதிகளுக்குப் புறம்பாக கையை வைத்து வாயை மூடிப் பேசியதற்காக ஈக்வடார் டிஃபென்டர் பியரோ ஹின்காபிக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். கடைசி வரை போராடிய போதிலும் ஈக்வடார் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.மெக்சிகோ அணி கடைசியாக 1986-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பல்கேரியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு அந்த அணி 1994 முதல் 2018 வரையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் 7 முறை நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. தற்போது மெக்சிகோ அணி 40 ஆண்டுகள் கழித்து நாக்-அவுட் வெற்றியை சுவைத்துள்ளது. ஈக்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோ அணியின் முதல் கோலை ஜூலியன் அடித்து அசத்தியிருந்தார். நடப்பு தொடரில் அவர், அடித்துள்ள 3-வது கோல் இதுவாகும். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் மெக்சிகோ அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜூலியன் குவினோன்ஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் தலா 4 கோல்களுடன் லூயிஸ் மடடோர் ஹெர்னாண்டஸ், ஜேவியர் சிச்சாரிடோ ஹெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் மெக்சிகோ – ஈக்வடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இடியுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கப்பட்டது.





















