
சென்னை: ஜூலை 3-
சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஆர்மீனியன் தெரு மற்றும் தம்பு செட்டி தெருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள தம்பு செட்டி தெரு, ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக, ஆர்மீனியன் தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம், கோயில்கள், தனியார் பள்ளிகள், ஓட்டல்கள் என வணிக நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.
இதேபோல, தம்புசெட்டித் தெருவில் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆர்மீனியன் தெருவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல, இப்பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருவதால் தினமும் காலை முதல் மாலை வரை இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முறையான திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியின்றி நெரிசல் குறையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அவசர நேரங்களில் இந்த இரு தெருக்களிலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த இரு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணக்கோரி ஏற்கனவே, சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் பூக்கடை உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு கடந்தாண்டு ஆக.7 அன்று புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


















