
சான்டா கிளாரா, ஜூலை 3- பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சான்டா கிளாராவில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் அமெரிக்கா, போஸ்னியா & ஹெர்சகோவினா அணியுடன் மோதியது. போட்டியின் தொடக்கத்தில் போஸ்னியா அணி அமெரிக்காவுக்குக் கடுமையான சவால்களைக் கொடுத்து கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. 31-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் வீரர் ஃபொலாரின் பாலோகன் அடித்த கோல் ஆஃப்சைடு என மறுக்கப்பட்டது. 45-வது நிமிடத்தில் மாலிக் திலெமன்ஸ் கொடுத்த நேர்த்தியான பாஸை கட்டுக்குள் கொண்டு வந்த ஃபொலாரின் பாலோகன், போஸ்னியா பின்கள வீரர்களின் தடுப்பையும் மீறி தாழ்வான ஷாட் மூலம் பந்தை கோல் வலைக்குள் தள்ளினார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் போஸ்னியா வீரர் தாரிக் முஹாரெமோவிச்சை ஃபவுல் செய்ததற்காக, விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு அமெரிக்காவின் ஃபொலாரின் பாலோகனுக்கு ரெட் கார்டு காண்பிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 78-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் புலிசிக் அடித்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. 82-வது நிமிடத்தில் அமெரிக்க அணிக்கு ஃப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் பாக்ஸின் வெளிப்பகுதியில் இருந்து மாலிக் திலெமன்ஸ் அடித்த கர்லிங் ஷாட் போஸ்னியா தடுப்புச் சுவரைத் தாண்டி கோல் வலையின் மேல் கார்னரை துளைத்தது. இதனால் அமெரிக்க அணி 2-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடியும் போஸ்னியா & ஹெர்சகோவினா அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.



















