
புதுடெல்லி: ஜூலை 3-
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தால், 2030ல் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம் ஆகும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக சமீப காலமாக மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 12 மாநிலங்களில் மின்சார வாகன விற்பனை சதவீதம் இரட்டை இலக்கத்தை தாண்டியது. இதில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 2030க்குள் புதிய வாகனப் பதிவுகளில் மின்சார வாகனங்களின் பங்கை தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்துவது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியைச் சேமிக்க உதவும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 2025ல் உள்ள 2.9 கோடியிலிருந்து 2030-க்குள் சுமார் 4 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 80 லட்சம் வாகனங்கள், அதாவது 20% மின்சார வாகனங்களாக இருக்கலாம்; 2025ல் மின்சார வாகனப் பதிவுகள் 15.7 லட்சமாக இருந்தன.2027ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டுக்குள் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாகக் கூடுதலாக 35 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும். இத்தகைய அளவிலான மின்சார வாகனப் பயன்பாட்டு அதிகரிப்பு, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை கணிசமாக குறைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




















