
சியாட்டில்: ஜூலை 3-
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் – செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 24-வது நிமிடத்தில் செனகல் அணி முதல் கோலை அடித்தது. செனகல் அணியின் நட்சத்திர வீரரான சடியோ மானே தனக்கு முன்னால் இருந்த தடுப்பாட்டக்காரரை நிலைதடுமாறச் செய்து, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி பந்தை வேகமாக கிராஸ் செய்தார்.
அங்கே நின்ற இஸ்மைலா சர்பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து வலது பக்க போஸ்ட்டில் பட்டு திரும்பியது. திரும்பி வந்த பந்தை அருகிலிருந்து ஹபீப் தியாரா மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் வலைக்குள் திணித்தார். இதனால் செனகல் அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது. 51-வது நிமிடத்தில் செனகல் வீரர் மூசா நியாகடே அடித்த தொலைதூர பாஸை கணிப்பதில் பெல்ஜியம் அணியின் வீரர் மெச்சேலே கோட்டைவிட, இஸ்மைலா சர் மின்னல் வேகத்தில் அவருக்குப் பின்னால் பாய்ந்து சென்று பந்தை நெஞ்சால் அழகாகக் கட்டுப்படுத்தி பெனால்டி ஏரியாவிற்குள் கொண்டு சென்றார். அங்கு அவர், நிலைதடுமாறிய போதிலும் தனது வலுவான ஷாட்டால் பந்தை கோல் வலைக்குள் செலுத்தினார்.
90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 7 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 119-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ் பகுதிக்குள் யூரி திலெமன்ஸ், செனகல் வீரர் லமின் கமாராவால் ஃபவுல் செய்யப்பட்டார். விஏஆர் சோதனையில் சுமார் 6 நிமிடங்களுக்குப் பிறகு பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி 120+5-வது நிமிடத்தில் யூரி திலெமன்ஸ் எளிதாக கோல் அடிக்க பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் யாரும் எதிர்பராத வகையில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. பெல்ஜியம் அணியின் இந்த சர்ச்சை கோல் காரணமாக செனகல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.



















