
பெங்களூரு: ஜூலை 3-
குவாரியில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக 3 பேரை தாவரேகெரே போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விபத்தில் உயிர் தப்பிய கோபிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், கிரஷர் நிர்வாகிகள் பாண்டுரங்கா, லோகேஷ் மற்றும் ராஜு ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல ஐஜிபி எஸ்.கிரீஷ் கூறுகையில், “அங்கு வேலை செய்துகொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது ராட்சதப் பாறை உருண்டு விழுந்ததில் ராமு, ராஜ்பால் சிங் உள்ளிட்ட 7 பேர் உடல் நசுங்கி பலியாயினர்” என்றார். விபத்தின் வீரியத்தில் 3 டிராக்டர்கள் முற்றிலும் நொறுங்கின. காயமடைந்த 5 பேர் மைசூர் சாலை ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை ஒருபுறம் இருக்க, விபத்து நடந்த கிரஷர்களின் அசல் உரிமையாளர்களான உதயசங்கர், ஆனந்தசுவாமி மற்றும் ஹிட்டாச்சி ஓட்டுநர் திருப்பதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். தப்பியோடிய அவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


















