
மங்களூரு: ஜூலை 3-
தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மகா மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்டத்திற்குப் பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறி எந்தவொரு கல்வி நிறுவனமாவது இன்று வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் கறாராக எச்சரித்துள்ளார். இந்த விடுமுறை உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், அங்கன்வாடிகள், குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















