Home மாவட்டங்கள் பெங்களூர் கல்யாண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

கல்யாண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

ராம்நகர்: ஜூலை 3-
கல்யாண மண்டபத்தில் வைத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளை எஸ்ஐஆர் மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ராமநகரா மாவட்ட ஆட்சியருக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி வி. அன்புகுமார் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ராமநகரா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அன்புகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்து, விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
ஆனால், ராமநகரா நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு திப்பு நகரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில், அதிகாரிகள் வீடு வீடாகச் செல்லாமல், மக்களை ஒரே இடத்தில் கூட்டி ‘சிறப்பு முகாம்’ நடத்துவதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
விதிமுறைகளை மீறி கல்யாண மண்டபத்தில் முகாம் நடத்திய அதிகாரிகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இந்த விசாரணையின் முழு அறிக்கையையும் தாமதமின்றி தங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கல்யாண மண்டபத்தில் கூட்டத்தைக் கூட்டி ஒட்டுமொத்தமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வாக்காளர் அடையாள ஆவணங்களை உருவாக்க முயற்சி நடப்பதாக எச்.டி. குமாரசாமி தனது வீடியோவில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.