
பெங்களூரு: ஜூலை 3-
பெங்களூரு எச்.ஏ.எல் வளாகத்தில் உள்ள பிரபல கேப்ஜெமினி ஐடி நிறுவன குழந்தைகள் காப்பகத்தில், 2 முதல் 3 வயதே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அழுகின்ற மற்றும் அடம் பிடிக்கின்ற குழந்தைகளை மிரட்டுவதற்காக, அங்கிருந்த ஊழியர்கள் குழந்தைகளை பிரண்ட் லோடு வாஷிங் மெஷினுக்குள் கட்டாயப்படுத்தி உட்கார வைத்துள்ளனர். மேலும், மேற்கத்திய கழிவறையின் ஜெட் ஸ்பிரே துப்பாக்கியை குழந்தைகளின் வாய்க்குள் வைத்தும், பாத்ரூமிற்குள் தள்ளி பூட்டியும் சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காப்பக பெண் ஊழியர்களான மஞ்சுளா, விஜயலட்சுமி, பவானி சிந்து மற்றும் பிந்து ஆகிய 5 பேரை எச்.ஏ.எல் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சிறுவர் நீதி சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அராஜகம் குறித்து ஏற்கனவே நிர்வாகத்திடம் புகார் அளித்த ஊழியர் ஒருவரை கடந்த மாதம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனால், அங்கு வேலை செய்த மற்றொரு ஊழியரின் நண்பர் மூலம் இந்த சித்திரவதை காட்சிகள் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. அவரது புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் கூறுகையில், “இது மிக கடுமையான குற்றம். நகரில் உள்ள மற்ற அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் விதிகளை சரியாக பின்பற்றுகிறதா என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு வளாகத்தில் உள்ள இந்த டே-கேர் மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக கேப்ஜெமினி நிறுவனம் அறிவித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு நடந்த இந்த சித்திரவதை சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















